Wednesday, September 1, 2010

இந்தியனாய் வாழ்வோம்  !

நீயும் நானும் பேசும்  மொழி வேறா இருக்கலாம்
நானும் நீயும் வாழும் மாநிலம் வேறா இருக்கலாம்
உனக்கும் எனக்கும் மதங்கள் என்பது வேறா இருக்கலாம்-ஆனால்
நீயும் நானும் இந்தியன் என்பதை மறக்கலாகுமா ..?

பணமிருப்பதாலே யாரும் மனிதரில்லையே
பதவிகளை வகிப்பதாலே மனிதரில்லையே
பரபரப்பு ஆர்ப்பாட்டம் உண்மை இல்லையே -நல்ல
பண்புதனை தாங்கி நின்றால் மனிதன் தானடா  !

மசூதியும் ஆலயமும் மாதா கோவிலும்
மனதையெல்லாம்  தூய்மையாக்கும்  இறைவன் வீடடா
மனதுக்குள்ளே வேற்றுமைகள் வருவதேனடா ?-நீ
மனிதனாக மாறி நின்று உயர்ந்து காட்டடா  !

உயர்ந்த மலையும் ஓடும் நதியும் இயற்கை தானடா
உனது எனது என்றேயதை பிரிப்ப தேனடா..?
உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுப்ப தேனடா ?-அதை
உணர்ந்துவிட்டால் நீயும் நானும் இந்தியன் தான்டா !!    


வேண்டாம் ! வேண்டாம் !!

எத்தனை பேர்  பேசினாலும் தெளியவில்லை...!
எத்தனை பேர் முயன்றாலும் முடியவில்லை...!
இன்னமும் ஏன் வேற்றுமைத் தீ அகலவில்லை ..?
இனிய நம் பாரதத்தில் ஏன் அமைதி இல்லை ..?

அமைதி நிலவ வேண்டும்.. !அமைதி நிலவ வேண்டும்...!
அமைதி நிலவ வேண்டும் ..! -என்றால் ..

சாதியின் பெயரால் சமயத்தின் பெயரால்
சண்டைகள் இனியும் வேண்டாம் வேண்டாம்
மொழியின் பெயரால் அமைப்பின் பெயரால்
மோதல்கள் இனியும் வேண்டாம் ! வேண்டாம் !!

நீரின்  பெயரால் நதியின் பெயரால்
நிம்மதி கெடுத்திட வேண்டாம் வேண்டாம்
எல்லா நதியும் இந்திய நதியே
என்பதை மறந்திட வேண்டாம் !வேண்டாம் !!

எனது மாநிலம் உனது மாநிலம்
என்றே பிரிவினை பேசிட வேண்டாம்
எல்லா மாநிலம் இணைந்தது ஏக
இந்தியா என்பதை மறந்திட வேண்டாம் !!

உயர்ந்தான் தாழ்ந்தான் என்றே சொல்லி
உணர்ச்சியை தூண்டிட வேண்டாம் வேண்டாம்
பண்பால் உயர்ந்தே காட்டிட வேண்டும்
பகைமை என்றும் வேண்டாம் ! வேண்டாம் !!

எங்கும் பசுமை எதிலும் புதுமை
ஏற்றிட மறந்திட வேண்டாம் வேண்டாம்
எல்லா மக்களும் இந்திய மக்கள்
என்பதை மறந்திட வேண்டாம் ! வேண்டாம் !!
  
 வேற்றுமை முறையோ ...?

இரத்தத்தின் நிறம் சிவப்பு
இவன் சிந்தும் வியர்வை கரிப்பு
இவ்வுலக முழுதுமிது ஒன்றடா
இருந்தும் வேற்றுமை வந்தது ஏனடா ..?

பிறந்து கொண்டு வந்தது மில்லை
இறந்து கொண்டு செல்வது மில்லை
பிறப்பில் உயர்வு தாழ்வு மில்லை
பிறரைப் பழிப்பது நியாய மில்லை  !!

சாதியும்  மதமும் காத்திடத்தானே    
சண்டைகள் செய்திட அல்ல ;
சாமியும் பூமியும் வணங்கிடத்தானே
சங்கடம் செய்திட அல்ல !!

பளிச்சிடும் குங்குமம் புனிதமடா
பண்பிருந் தால்தான் மனிதனடா !
பால் போல் சிரித்திட வேண்டுமடா -நம்
பாரதம் செழித்திட உழைத்திடடா !!

1 comment:

  1. உங்கள் பாடல்களில் நீங்கள் கனவு காண்கிறபடி இந்தியா இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்; ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லையே! எல்லா நதியும் இந்திய நதிதான் என்றால் அவை ஏன் எல்லை தாண்டி வர மறுக்கின்றன. எல்லா மொழியும் இந்திய மொழிகள் என்றால் ஏன் இந்தி மட்டும் ஆட்சி மொழியாக இருக்கிறது. அதனைப் பெரும்பான்மையினர் பேசும் மொழி எனக் காட்டுவதற்காக ஏன் பல பழங்குடியினரின் மொழிகள் மறைக்கப்பட்டு அவர்களும் இந்தி பேசுவதாகக் காட்டப்படுகிறது?

    ReplyDelete