Friday, October 22, 2010

மாவீரன் நேதாஜி !

வெற்றி வெற்றி என்ற சொல்லை
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
தோல்வியுறச் செய்தவன் !

காங்கிரசில் எத்தனையோ
கருத்து மோதல் இருந்தபோதும்
கவலையின்றி முழக்கமிட்டு
கம்பீரமாய் நின்றவன் !

ஜனநாயக நெறிமுறையை
அன்றைக்கே சொன்னவன் -ஆம்
ஜனநாயக வழியினிலே
வெற்றி முழக்கமிட்டவன் !

வெற்றி என்ற சொல்லை மட்டும்
விரதமாகக் கொண்டதாலே
தோல்வி என்ற வார்த்தைகளை
துடைத்தெறியச் செய்தவன் !

ஐ என் ஏ என்ற சொல்லால் 
ஆதிக்க வெறியர்களை 
ஆட்டம் காண வைத்திட்ட
ஆற்றல்மிகு தளபதியே !

ஆம் !
நேதாஜி என்று சொன்னால் 
வீரம்தான் நினைவில் வரும் 
உன் உருவத்தைப் பார்த்தாலே 
உணர்ச்சிகள்தான் பொங்கி வரும் !

எழுச்சிமிக்க இளைஞர்களை      
உருவாக்கித் தந்ததாலே
எழுச்சியோடு இன்னமுந்தான்
நெஞ்சமெல்லாம் வாழ்கிறார் !

சாதி மத  பேதங்களை
சாக்கடைக்குள் எரிந்ததாலே
சாகசங்கள் செய்து இன்னும்
சாதனையாய் நிற்கிறார் !

தேச விடுதலைக்கு குரல் கொடுத்து
போர் முழக்கம் செய்தபோது
மென்மையான பெண்களையும்
வீர முழக்கமிட வைத்தவர் !

ஜான்சிராணி படையினிலே
தளபதியாய் முழக்கமிட்ட
வீரத்தாய் லட்சுமிசேகல் 
வாழும் நாட்டில் வாழ்கிறோம் !

நேதாஜி ! நீ 
வெள்ளையனை மிரள வைத்த 
சிம்ம சொப்பனம் !
வேறுபாட்டை ஓட வைத்த 
எங்கள் தேச அர்ப்பணம் !!

உன் உரத்த வார்த்தையெல்லாம் 
இன்னும்   கேட்குது !
உந்தன் பேரைச் சொன்னாலே 
வீரம்   பிறக்குது !! 

தலைவா !
உங்களுக்கு நாங்கள் செய்யும் 
நன்றி  ஒன்று தான் 
நமது நாடு நமது மக்கள் 
என்று சொல்லுவோம் !

நல்லவராய் சாதி மதச் 
சண்டை  நீங்கியே 
நாடு போற்ற ஒன்றுபட்டு- நாங்கள் 
வாழ்ந்து  கட்டுவோம் !!


  
   

Sunday, October 17, 2010

அண்ணல் காந்தியின் எண்ணங்கள்

இனிய கீதை குரான் பைபிள் எதனை நோக்கினும்
இறைவன் ஒன்று என்றுதானே எனக்கு தோன்றுது
இறைவன் என்பான் மேலுமில்லை கீழுமில்லையே
இருப்பதெல்லாம்  உங்களது இதயத்தில் தானே !

மதங்களெல்லாம் சரிசமமே என்று எண்ணினால்
மனங்களெல்லாம் உயர்ந்ததென்று என்றும் சொல்லுவேன்
மனிதனாகப் பிறந்த எவரும் செய்யும் சேவையில்
மகிழ்வுடனே இறைவனைத்தான் காண நினைக்கிறேன்

எப்படியோ சுதந்திரந்தான் அடைந்தோம் என்று நீ
எல்லாக் காரியமும் நடந்திடவே அரசினைத்தானே
எதிர்பார்ப்பதுடன் குறைகளையும் சொல்லுவ தெல்லாம்
எதற்கும் நாமே லாயக்கில்லை என்பதேயாகும் !

பலம் நிறைந்த மனிதனுக்கும் பலம் குறைந்த மனிதனுக்கும்
பாரபட்ச மின்றி சம வாய்ப்பளிக்கும் அரசுதான்
பாரதத்தின் உண்மையான மக்களரசு என்று
பாரெலாமே கேட்டிடத்தான் உரக்க நானும் சொல்லுவேன்

தேச சொத்தை வீணடிக்க உரிமை நமக்கு இல்லையே
தேசம் உயர சிக்கனத்தை கற்றுக்கொள்ள வேண்டுமே
தெளிவுடனே உங்கள் உள்ளம் என்றும் இருந்தால்
தேச பக்தரென்று உங்களைத்தான் சொல்லிடலாமே !

ஆயுதங்கள் ஏந்திடாமல் அகிம்சை வழியிலே
ஆங்கிலேயனை எதிர்த்து போர் புரிந்தான்
ஆயிரங்கள் இன்னலுற்று விடுதலை பெற்றார்
ஆதலாலே அண்ணலை நாம் தந்தை என்கிறோம் !

அண்ணல் காந்தி சொல்லிவைத்த பாதையில் சென்று
அர்த்தமுள்ள மனிதனாக வாழ்ந்திடு வோமே
அனைவரையும் நம்மவராய் எண்ணிடுவோம் -தேசம்
அமைதி காண என்றுந்தானே உழைத்திடுவோமே !!
      

Wednesday, September 22, 2010

இலட்சிய வேட்கை

மனிதராய் பிறந்திட்ட ஒவொருவருக்கும்
மனத்தினில் பற்பல ஆசையுண்டு
மனிதராய் வாழ்ந்திடும் ஆசைகள் விட்டு -சிலர்
மாபெரும் அரக்கராய் வாழ்வதும் உண்டு  !
ஆம்,
பெரும் பொருள் ஈட்டுதல் சிலருக்கு ஆசை
பெருமைகள் பேசுதல் சிலருக்கு ஆசை
பெரியோரை என்றென்றும் அவமதித்து
பெரும் பித்தராய் திரிவதில் சிலருக்கு ஆசை ! 

வரதட்சணை வாங்கிட சிலருக்கு ஆசை
வறியோரை வதைத்திடல் சிலருக்கு ஆசை
வன்முறை செய்வதில் சிலருக்கு ஆசை -தான் மட்டும்
வளமாக வாழ்ந்திட சிலருக்கு ஆசை  !

பொய் மட்டும் பேசிட சிலருக்கு ஆசை
பொறாமை கொள்வதில் சிலருக்கு ஆசை
பொறுமையைத் தொலைப்பதில் சிலருக்கு ஆசை
பொறுப்பினை மறப்பதே சிலருக்கு ஆசை  !

அதிகாரம் செய்வதில் சிலருக்கு ஆசை
அடங்கிப் போவதே சிலருக்கு ஆசை
அசிங்கங்கள் செய்வதில் சிலருக்கு ஆசை 
அர்த்த மில்லாமல் வாழ்வதில் ஆசை  !!

சிலர்...
மனித நேயத்தை விட்டுவிட்டு
மதங்களைச் சொல்லி ஆட்டி வைப்பார்
மாண்புகள் எல்லாம் விட்டுவிட்டு -தன்னை
மாபெரும் மனிதரென சொல்லிக் கொள்வார்  !

சாதியின் பெயரைச் சொல்லிக்கொண்டு
சாதியைத் தான்தான் காப்பதுபோல்
சாக்கடைச் சண்டைகள் செய்து தினம்
சாதனை செய்வதாய் பீற்றிக் கொள்வார்  !

ஏழையாய் இருந்தால் ஒரு சாதி !
ஏற்றம் பெற்றால் ஒரு சாதி  (!!) 
ஏனோ அதனை நாம் மறந்து -இன்னும்
எதனாலோ சண்டை செய்கின்றோம் ..(!) ?

       வேட்கை நமக்கு இருந்திட வேண்டும்
       வேற்றுமை நீங்கி வாழ்ந்திட வேண்டும்
       வேதங்கள் சொன்ன வழியில் நாமும் -இனி
       வெற்றி முழக்கம் செய்திட வேண்டும்  !

       மதவெறி தொலைத்திட வேட்கை வேண்டும்
       மகத்தான தொண்டுகள் செய்திட வேண்டும்
       மனிதனை மனிதனாய் மதித்திடும் செயலே
       மனத்தினில் என்றும் நிலைத்திட்  வேண்டும்  !!

அன்னையிடம் வேண்டல்  !

பண்பாடு  காத்திடும்
பாரதத்  திருநாட்டின்
ஜனநாயகம் என்றும் நிலைத்திடவும்

மனிதத்  தன்மைகள்
வற்றாது  என்றும்
மனிதங்கள் இங்கே வளர்ந்திடவும்

வளமைகள்   பெருகிட
ஓடிடும்  நதிகளை
ஓரிடம்  நிறுத்தாது
ஒன்றாக விரைவில் இணைத்திடவும்

கல்வியும்  தொழிலும்
காண்போர்  வியந்திட
இன்னும் இன்னும் உயர்ந்திடவும்

பாரத  அன்னையே
பணிவுடன்  உந்தன்
பாதங்கள்  தொழுது
வேண்டுகிறேன் -என்றும்
இலட்சியம் உன்னை வேண்டுகிறேன்  !

 

Monday, September 13, 2010

உலக மகளிர் தினம்

எழுந்திட வேண்டும் எழுந்திட வேண்டும்
ஏகமாக நீங்களெல்லாம் எழுந்திட வேண்டும்
உயர்ந்திட வேண்டும் ! உயர்ந்திட வேண்டும்! -என்றும்
உலகம் வியக்க உங்கள் கைகள் உயர்ந்திடவேண்டும் !!

அடிமையில்லை அடிமையில்லை அடிமை இல்லைதான்
ஆக்குகின்ற பெண்களென்றும் அடிமை இல்லைதான்
நோக்குகின்ற மனிதரெல்லாம் உங்களைத் தானே -இனி
நோகச்செய்யத் தான் நினைத்தால் பயப்பட வேண்டாம் !!

ஜான்சிராணி வீறுகொண்ட வேலு நாச்சியார்
உலகமெலாம் தான் வியந்த அன்னை இந்திரா
அகிலம் போற்ற சேவை செய்த அன்னை தெரசா
அவர்கள் காட்டிவைத்த வழிதனிலே எழுந்திட வேண்டும் !!

வேளாண்மையும் தொழில்துறையும் முன்னேறத் தானே
வேகமாகப் பெண்களெல்லாம் எழுந்திட வேண்டும்
வேதனைகள் அத்தனையும் ஒழிந்திடத் தானே -நீங்கள்
வெற்றி காணும் பெண்களாக எழுந்திட வேண்டும் !!

சாகடிக்கும் வரதட்சணை கொடுமையைத் தானே
சாகடிக்க நீங்களெல்லாம் எழுந்திட வேண்டும்
சாதிமத சாக்கடையில் வீழ்ந்திடாமலே -பெரும்
சாதனைகள் செய்திடத்தான் எழுந்திட வேண்டும்  !!      

Sunday, September 12, 2010

பயம் கொள்ள வேண்டாம் பெண்ணே ...!

போகப் பொருட்களாய் பெண்களை நினைத்திடும்

போக்குகள் மாறிட வில்லை

பெட்டி பெட்டியாய் வரதட்சணை கேட்டிடும்
பெரும் கொடுமைகள் மாறவும் இல்லை 

கட்டிய மனைவியை வேலையா ளாககிடும்
சிலர் -கயமைகள் மாறவும் இல்லை
ஒட்டிய வயிறுடன் குடும்பத்தைக் காத்திடும் -அவர்களின்
தியாக வரலாறு மாறவும் இல்லை  !

பெரும்பெரும் பதவியில் பெண்களே வந்தாலும்
பிரச்சனை  தீரவும் இல்லை
பெருமையாய்ச்  சொல்லிட இல்லறப் பெண்களின் -வாழ்வில்
 பேரதிசயம் நடக்கவும் இல்லை  !

பெண்களை வியாபாரப் பொருளாக்கும் பேடியை
ஒழித்திட வேண்டும் பெண்ணே
பெருவஞ்சகம் செய்திடும் நரிகளைக் கண்டால்
பொசுக்கிட வேண்டும் பெண்ணே  !

பொன்னே மணியே கனியே என்றுனை
போற்றினால் மயங்கிட லாகாது பெண்ணே
போற்றிடும் மனிதனின் போக்குகள் என்னென்று
புரிந்திட வேண்டும் பெண்ணே  !

இன்று ...
பெண்களைப் பெண்களே வியாபார மாக்கினால்
விட்டிட லாகுமோ பெண்ணே ...?
பெண்களைப் பெண்களே கேவலம் செய்தால்
பொறுத்திட லாகுமோ பெண்ணே ...?

பெற்ற உரிமைகள் ஏகமாய் விட்டு நீ
பேதையாய்ப் போகாதே பெண்ணே
பெண்ணே பெண்ணே நியாயங்கள் கேட்டிட
பயப்பட லாகாது பெண்ணே  !

பெட்டியுள் இருக்கும் பேதையாய் இருக்காமல்
சீறி எழுந்திடு பெண்ணே
பொறுமை பொறுமையென பொறுத்தது போதும்
பொங்கி எழுந்திடு பெண்ணே  !!

நல்ல பெண்  !

நல்ல மனிதர்க்கு நல்ல மனைவியாய்
நடந்திட வேண்டும்
பெற்ற தாயினைப் போல பெண்களை நினைத்திடும்
மனிதரை மதித்திட வேண்டும்
நல்ல மனிதரை மதித்திட வேண்டும் -என்றும்
மனிதரை மதித்திட வேண்டும்  !

எதற்க்கெடுத்தாலும் பிடிவாதம் கொள்ளாது
இணைந்தே போகிட வேண்டும்
என்றும் உன்னை நல்லபெண் என்று
எல்லோரும் உயர்த்திட வேண்டும்
நல்லதை நடத்திடும் நல்லபெண் என்று -உனை
நாடெலாம் போற்றிட வேண்டும்  !!
             

Saturday, September 11, 2010

உழவுத் தொழிலை உயர்த்திடுவோம்  !

ஏறுகலப்பை இல்லையின்னா நாமுங்க
எந்தக் காரியமும் நடத்த முடியாதுங்க
ஏழைபணக்  காரரிங்கு இல்லீங்க
எல்லாருமே இங்கே ஒன்னுதானுங்க !
        ஆமா ! எல்லாருமே இங்கே ஒன்னுதானுங்க !

காடுகரைய செழிக்க வச்சது யாருங்க ..?-நம்ம
கண்ணாத்தாளும் முருகப்பனுந் தானுங்க
காலை மாலை உங்களுக்குப் பாடுபட்டாங்க -அவுங்களை
கண் கலங்காமலே பாதுகாக்க வேணுங்க !                  
  
காலு கையி சகதிசேறு தானுங்க -அந்த
காத்தாயி உழைச்சாத்தான் சோறுங்க   
காடுகழனி நிறைஞ்சிடத்தான் வேணுங்க
காலம் போற்ற உழவுத் தொழிலை உயர்த்துங்க !

வற்றாத ஆறு நிறைய ஓடுதுங்க -அதை வச்சு
வளமான உழவுத் தொழிலை உயர்த்துங்க
வடக்கு தெற்கு என்றுதானே பார்க்காம -இந்த
வையமெலாம் வாழ்த்த நீங்க உயர்த்துங்க  !!

      
மரங்களை வளர்ப்போம் நண்பா  !

நல்லது செய்திட வேண்டும் வேண்டும்
        நண்பா  நண்பா
நல்லதை இன்றே செய்திட வேண்டும்
        நண்பா  நண்பா
நாடும் வீடும் வாழ்ந்திடத்தானே
        நண்பா  நண்பா
நாலு மரங்களைத்தானே வளர்த்திட வேண்டும்
        நண்பா ! நண்பா !

நிழல்தர மரமும் மழைதர மரமும்
        வேண்டும்  நண்பா
நினைத்திட வேண்டும் மரங்களை வளர்த்திட
        நண்பா  நண்பா
நீயும் நானும் சேர்ந்து உழைப்போம்
        நண்பா  நண்பா
நீண்டு அகன்ற மரங்களை வளர்ப்போம்
        நண்பா ! நண்பா !

நுண்ணிய அறிவால் உயர்ந்திட வேண்டும்
        நண்பா  நண்பா
நுட்பம் நிறைந்த மனிதர்கள் சொல்வதை
        கேட்டிடு  நண்பா
நூற்றுக் கணக்கிலே மரங்களை நடுவாய்
        நண்பா  நண்பா
நூலோர் சொன்ன வளங்களை காண்போம்
        நண்பா ! நண்பா !

நெற்றியில் வேர்வை சிந்த உழைத்தால்
        நண்பா  நண்பா
நெல்லும் மணியும் குவிந்திடு மிங்கே
        நண்பா  நண்பா
நேரும் துன்பம் எல்லாம் நீங்கும்
        நண்பா  நண்பா
நேர்த்தியாகவே வாழ்ந்திடலாமே
        நண்பா ! நண்பா !

அதனால்...
நல்லது செய்திட வேண்டும் வேண்டும்
        நண்பா  நண்பா
நல்லதை இன்றே செய்திட வேண்டும்
        நண்பா ! நண்பா !!
நாடும் வீடும் வாழ்ந்திடத்தானே
        நண்பா  நண்பா
நாளும்  மரங்களைத்தானே   வளர்த்திடுவோமே
        நண்பா ! நண்பா !!


சேகரிப்போம் மழை நீரை  !

சேர்த்திடுவோம் சேர்த்திடுவோம் செர்த்திடுவோமே 
சேர்ந்துவரும் மழை நீரை செர்த்திடுவோமே
சேகரிப்போம் சேகரிப்போம் சேகரிப்போமே
சேத்துக்குள்ளே  போகாமத்தான் சேகரிப்போமே  !

வீத்யோடி வீணாப் போகும் தண்ணீரைத்தானே
வீட்டுக்குள்ளே தொட்டிகட்டி தேக்கி வைப்போமே
வீண்வம்பு வெட்டிப்பேச்சு பேசாமத்தானே
விபரமாகத் தண்ணீரைத்தான் சேர்த்து வைப்போமே  !

நேற்ற்மின்றும் காலமொன்று போலிருக்குமா ..?
நெனச்சதெல்லாம் நடக்குமென்று  நம்ப முடியுமா.. ? (!)
நேரில் வரும் மழைநீரை சேர்த்து வைக்காம 
நேரும் துன்பம் அத்தனையும் போக்க முடியுமா ? (!!)

நாடும் வீடும் நல்லபடி இருந்திடத்தானே
நாமெல்லோரும் சேர்ந்துதானே உழைத்திடுவோமே
நம்ம தமிழகத்து முதல்வரம்மா சொன்னதைக் கேட்டு
நாம தலைவணங்கி ஏற்றுத்தானே செயல்படுவோமே  !

சிறுதுளியாய் சேர்த்துவைத்த மழை நீரைத்தானே
சிக்கனமா செலவழிக்க முயன்றிடுவோமே
சிரமங்களை வருமுன்னே தடுத்திடுவோமே
சிக்கலெல்லாம் போக்கி நாம மகிழ்ந்திடுவோமே  !!
        ஆமா !சிக்கலெல்லாம் போக்கி நாம மகிழ்ந்திடுவோமே  !!       

Wednesday, September 8, 2010


 இயக்கத்தில் சே ர்ந்திடுவீர் 

சிந்தனை செய்வாய் சிந்தனை செய்வாய் 
      இளையவனே -நீ 
சிந்தனை செய்தே சேர்ந்திடு சாரணர் 
      படையினிலே  ! 

பேடன்பவல் என்ற சாரணத் தந்தை 
      சொன்னதை நீயும் கேளு -அவன் 
சொன்னதைச் செய்தால் ஊரும் உலகுமுனை 
      போற்றிடுந்தானே பாரு !
சாதி மதங்களை கடந்தே நீயும் 
      சாதனை செய்தே நில்லு -நாம் 
சோதரர்தானே எல்லோரும் ஒன்றே 
      என்றே தினமும் சொல்லு !

எத்தனை உயிர்கள் எத்தனை இடத்தில் 
      இறைவன் படைத்தான் பாரு 
அத்தனை உயிரும் உன்போல் தானே 
      உள்மனதை நீ கேளு 
செடியும் கொடியும் மரமும் உயிர்கள் 
      என்றே நீயும் எண்ணு 
செய்திடும் நல்ல காரியம் என்றும் 
      வெல்லும் ! உன்பேர் சொல்லும் !!

நாணயம் நம்பிக்கை இரண்டு மிருந்தால் 
      வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்வு ;
நாடும் உயர்ந்து நீயும் வளர்ந்தால்
      அதுதான் உனக்கு உயர்வு !
நல்லது நினைத்து நல்லது நடந்தால்
      அதுவே நமக்கு மகிழ்வு ;
நாடும் நடப்பும் வளமாயிருந்தால்-என்றும்  
      அதுதான் நமக்கு உயர்வு !!
சாரணர் படை
வருது வருது வருது பாரு சாரணர் படை
வளமை செய்ய வருகுது  பார்  சாரணர் படை
ஒழுக்கமெலாம் காட்டி  நிற்கும் உன்னதப் படை 
ஒற்றுமையை நாட்டுகின்ற சாரணர் படை !
      தேச-ஒற்றுமையை நாட்டுகின்ற சாரனர்ப் படை !!

சாதிசமய பேதமெல்லாம் இங்கு இல்லைதான் 
சமத்துவ சமுதாயந்தானே  எங்கள் கொள்கைதான்
கடமை கண்(ணி)யம் கட்டுப்பாடு உணர்வுடன்தானே 
காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !
      நல்ல-காரியங்கள் ஆற்றும் செயல்வீரர் நாங்களே !!   

தேசமெல்லாம் போற்றுகின்ற நேசப் படையிது
தேசியத்தை உயர்த்திடவே உதித்த படையிது
பறவை விலங்கு எல்லா உயிரும் நண்பன் என்றுதான் 
பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !
      பண்புடனே நடந்துகொள்ளும் இளைஞர் படையிது !!

தேசப்பற்று தெய்வபக்தி இருந்திட வேண்டும் 
தெய்வமெல்லாம் ஒன்று என்று எண்ணிட வேண்டும் 
பேடன்பவல் என்ற எங்கள் சாரணத் தந்தை 
சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம்  !
      சொன்னதையே என்றும் நாங்கள் செய்து காட்டுவோம் ! 
           
             சாரணர் படை !சாரணர் படை !!
             சாரணர் படை !சாரணர் படை !!


           
தேடி  அலைகின்றார் ...! (?) 
எங்கே..?.எங்கே..? எங்கே ? என்று
தேடி அலைகின்றார் !-இறைவன் 
எங்கே ? எங்கே ? எங்கே என்று 
தேடி அலைகின்றார் ! !

அங்கும் இங்கும் எங்கும் தானே 
தேடி அலைகின்றார் ;
அகிலமெலாமே இறைவனைத் தானே 
தேடி அலைகின்றார்..! !

அன்பும் பண்பும் தொலைத்தே இறைவனைத் 
தேடி அலைகின்றார் ;
அகிம்சை மறந்தே இறைவனைத் தானே 
தேடி அலைகின்றார் !!

காசும் பொருளும் கொடுத்தே இறைவனை 
வாங்கிட நினைக்கின்றார்..! (?)
கருணை மறந்தே இறைவனைத் தானே 
காணத் துடிக்கின்றார் !! (?)

சாதியின் பெயரால் சாமியைச் சொல்லி 
சாதிக்க நினைக்கின்றார் !
சாக்கடை நீரை சந்தனம் என்று 
சத்தியம் செய்கின்றார்..!!

இருக்குமிடத்தை மறந்தே இறைவனை 
இல்லாத இடந்தனிலே 
எங்கே ..? எங்கே..? எங்கே..? என்று 
தேடி அலைகின்றார்...!-ஆம் 
சிலர் தேடி அலைகின்றார் !! (?)