Sunday, August 29, 2010

"நல்லிணக்கம் போற்றுவோம்" எனும் எனது நூலிலிருந்து ....
இலட்சியம் சிதம்பரம்.
 


வேண்டுகிறேன்

அன்னையே ஆதி பராசக்தியே
அல்லாவே எல்லாம் ஆனவரே
அன்பான எங்கள் ஏசுநாதரே
அஹிம்சையை போதித்த புத்த(ர்)பிரானே
அபிலாசைகள் துறந்திட்ட மகாவீரரே
அகங்களில் நிறைந்திட்ட சீக்கிய குருவே
அமைதியே உலகெலாம் நிலவிடத்தானே -என்றும் 
அருள்தர இலட்சியம் வேண்டுகிறேன்.

நல்லிணக்கம்

இறைவனை நினைப்பது ஒரு நல்லிணக்கம்
அவரவர் மனத்தில் அவரவர் இறைவனை 
அவரவர் முறைப்படி அவரவர் நினைத்தால்
அனைவருக்கும் அது சிறந்த நல்லிணக்கம் !

எம்மொழி எனக்கு உயர்வென்பதும்
எம்மதம் எனக்கு உயர்வென்பதும்
எம்மவர் எனக்கு உயர்வென்பதும்
எண்ணுதல் என்றும் தவறு அல்ல !

எம்முடை(யது) மட்டுமே உயர்வென எண்ணி
எதிரியாய் பிறரைத   தான் நினைத்து
எவரது உணர்வையும் புண்படுத்த
எத்தனித்தால் அது இணக்கமல்ல !

எத்தனை மதமும் எத்தனை சாதியும்
எத்தனை மொழியும் எத்தனை இறைவனும்
எத்தனை இங்கே இருந்தாலும்- நாங்கள்
எல்லோரும் இந்தியர் என்பதே நல்லிணக்கம் !!

மரபு

மரபினை மறக்காது இருப்பது மரபு
மறந்தால் நோகும் என்மன உணர்வு
மனத்தினில் ஒன்றினை நான் நினைத்து
மறந்தும் மற்றதை எழுதாது என் மரபு !

இலக்கணம் எல்லாம் எனக்கு தெரியும் ..(!)
இலக்கியம் எல்லாம் எனக்கு தெரியும் ..(!)
இப்படியெல்லாம் எதையேனும் சொல்லி
இருப்போரை ஏமாற்றல் எந்தன் மரபு அல்ல !!  

நல்லவர்கள் வாழ்த்த வேண்டும் !

அன்பு என்னும் அறவழியை ஏந்திட வேண்டும்
ஆயுளெல்லாம் நிம்மதியாய் இருந்திட வேண்டும்
ஆர்ப்பாட்டம் அத்தனையும் விட்டிட வேண்டும்
ஆடிப்பாடி அகமகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் !

ஆசைப்பட்டு தீயவழியில் சென்றிட வேண்டாம்
ஆனந்தங்கள் அத்தனையும் தொலைத்திட வேண்டாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடவே வேண்டுமென்று நீ
ஆ(யா)ரையேனும் துன்புறுத்த நினைத்திட வேண்டாம் !

நாணயமாய் நடந்திடவே முயன்றிட வேண்டும்
நாலுகாசு நேர்மையாக சேர்த்திட வேண்டும்
நாட்டுப்பற்றை மனத்தினிலே வளர்த்திட வேண்டும்
நாடுயர்ந்தால் நாமுயர்வோம் என நினைத்திட வேண்டும் !

நல்ல நல்ல காரியந்தான் செய்திட வேண்டும்     
நலம் கிடைக்க அனைவருக்கும் உதவிட வேண்டும்
நல்லிணக்க வழியினிலே சென்றிட வேண்டும் -என்றும்
நல்லவர்கள் வாழ்த்தும்படி வாழ்ந்திட வேண்டும் !!

தேசியக் கொடியை
வணங்குகிறோம்
!!

வணங்குகிறோம்
கொடியை வணங்குகிறோம்
இந்திய தேசிய
கொடியை வணகுகிறோம் !

தியாகத்தை நினைவூட்டும் காவி நிறம் ,
வெள்ளை உள்ளத்தை வெளிக்காட்டும்
வெண்மை நிறம் ;
பசுமையும் வளமையும் செழுமையும்
காட்டும் பச்சை நிறம் ;

தருமச் சக்கரத்தை நடுவில் ஏந்தி
கம்பீரமாக உயர்ந்து பறக்கும்
எங்கள் இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை வணங்குகிறோம் !!

இந்தியத் திருநாட்டின் உயிர் நாடியாம்
உழவுத் தொழிலின் மேன்மையைச் சொல்லும்
எங்கள் இந்திய தேசிய
கொடியை வணங்குகிறோம் !

அன்னையே பாரத அன்னையே -நீ   
உயர்த்திப் பிடித்திருக்கும்
இந்திய தேசியக்    
கொடி உயர்ந்திடத்தானே  
எழுச்சி முழக்கமிட்டு வணங்குகிறோம் !-மிகுந்த
பணிவுடன் உன்னை வணங்குகிறோம் !!

சுதந்திரம் ! சுதந்திரம் !!

உரிமை தந்த சுதந்திரம்
உயர வைத்த சுதந்திரம்
உண்மையான சுதந்திரம்
உள்ளம் நிறைந்த சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

கொள்ளையடித்த வெள்ளையரை 
விரட்டியடித்த சுதந்திரம் !
கொள்கை மிக்க தலைவரெல்லாம்
வாங்கித் தந்த சுதந்திரம் !
      சுதந்திரம் !சுதந்திரம்!!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

எல்லா மக்களும் எல்லா வளமும்
பெற்றிட வாங்கிய சுதந்திரம் !
எத்தனை மதங்கள் இருந்தபோதும்
இந்தியரான சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!
      சுதந்திரம் !சுதந்திரம் !!

எல்லை வந்து தொல்லை தந்தால்
விரட்டியடிக்கும்   சுதந்திரம் !
எங்கள் நாடு  இந்திய  நாடு
என்றே சொல்லும் சுதந்திரம் !!
      சுதந்திரம் ! சுதந்திரம் !!
      சுதந்திரம் ! சுதந்திரம் !!

No comments:

Post a Comment